Monday, March 14, 2011

அகம் ... புறம் ... ரணம் (2.5D)

வெயிலை நலம் விசாரித்துக் கொண்டிருந்தன
என் வேர்வைத் துளிகள் ...

எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தது
பிளாட்பார மின்விசிறி ...

இரயிலை எதிர்பார்த்து - சிலர்
கிழக்கு பார்த்துக் கொண்டிருந்தனர் ...

" அப்பப்பா ... என்ன வெயில் ?
மழை பேஞ்சா பரவால்ல ... " - கைக்குட்டையில்
முகம் துடைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் - பெரியவர்

. . . . . . . . .

மழை !?..

மனம் ஏங்கத் தொடங்கியது ...
அம்மாவுக்குமாய் சேர்த்து ...

. . . . . . . . .

காபி ஸ்டாலில் சொட்டிக்கொண்டிருந்த குடிநீர்
குழாயில் கை நனைத்து விளையாடிக்
கொண்டிருந்தது - குழந்தை

. . . . . . . . .

அம்மாவின் ஞாபகக் கசிவுகள் ,
என் உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்தன
அந்தக் குழந்தையைப் போல ...

வானலியில் வறுபடும் வெங்காயமாய் வெந்து
புழுங்க ஆரம்பித்தது - மனம்

. . . . . . . . .

தூரத்தில், வெயிலுக்கு குடை பிடித்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தார் - ஒரு பெண்

. . . . . . . . .

வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீச ஆரம்பித்தது ...

. . . . . . . . .

கை நனைத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை
ஓடிச் சென்று தாவியது - அந்த குடை பெண்ணிடம் ...

"ஏய் .. நில்லு .." - கத்தினார் குழந்தையோடு இருந்தவர்

. . . . . . . . .

வானம் கிழித்து மண்ணில் இறங்கியது மின்னல்
வலியில் கதறித் துடித்தது - வானம் ...
ஆரவாரம்மாய் ஆரம்பித்தது - மழை

. . . . . . . . .

குழந்தைக்குமாய் சேர்த்து குடை பிடித்தபடி
ஓடி வந்தார் - அப்பெண்

. . . . . . . . .

மழையில் குளித்தபடி வந்து கொண்டிருந்தது - இரயில்

. . . . . . . . .

குடைப் பெண்ணிடம் குழந்தையை வாங்கியவர்
" அப்படியே அம்மா போல இருக்கீங்களா ...
அதான் .." என்றார்

அப்பெண் குழந்தையின் தலை வருடியபடி விலக
குழந்தை கைநீட்டி அழ ஆரம்பித்தது ...

. . . . . . . . .

நான் - என் கண்ணீர் துளி மறைக்க
மழையில் நனைய ஆரம்பிதேன் ...

. . . . . . . . .

இரயில் நின்றது ,
குடைபெண் - பெண்களின் பெட்டியில் ஏறினார் ...

. . . . . . . . .

மழை முரட்டுத்தனமாய் பெய்யத் தொடங்கியது
உள்ளும் ... புறமும் ...

. . . . . . . . .

சாலைகளில் - வழியடைத்து
தேங்க ஆரம்பித்தது மழை வெள்ளம் ...

. . . . . . . . .

சற்று முன், மழை விரும்பிய அப்பெரியவர்
மழை வெறுத்து விலகி நின்றார் ...

. . . . . . . . .

திரும்பிப் பார்த்தேன் ,
இரயில் மேற்க்கோடிக் கொண்டிருந்ததது ...

. . . . . . . . .

. . . . . . . . .

நனைந்தபடி நடக்க ஆரம்பிதேன் - டெலிபோன் பூத் நோக்கி ..

. . . . . . . . .

பாக்கெட்டில் இருந்த ஒத்த பத்து ரூபாய் நோட்டை
தடவியபடி, டயல் செய்து காத்திருந்தேன் .......

. . . . . . . . அம்மாவிடம் தலை துவட்டிக் கொள்ள . . . . . . . .

No comments:

Post a Comment